சங்கரய்யாவின் இளமைப்பருவம்:
1922ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆத்தூரில் பிறந்த சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாப சந்திரன். மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துகொண்டார். நீண்ட நெடிய போராட்ட களங்களை கண்ட சங்கரய்யாவின் வரலாற்றில் முதல் போராட்டமே இந்தித் திணிப்புதான். 1938-ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து போராட்டங்கள் வெடிக்க, மதுரை வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கரய்யா பங்கேற்றார்.
ரகசியமாக தொடங்கப்பட்ட கிளை:
ஆங்கிலேயர்களின் தடையையும் மீறி மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ரகசியமாக அமைக்கப்பட்டபோது, அதில் இருந்த ஒன்பது உறுப்பினர்களில் சங்கரய்யாவும் ஒருவர் ஆவார். 1941ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த, சங்கரய்யா தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். அப்போது, “நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல… நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று மாணவர்கள் மத்தியில் சங்கரய்யா கர்ஜித்தார்.
மாணவர்களை திரட்டிய சங்கரய்யா..!
கைது நடவடிக்கையால் கல்லூரித் தேர்வை எழுத முடியாமல் போக, 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்ட பின், நடந்த மாணவர் சங்க மாநாட்டில் தமிழ்நாட்டுப் பிரிவின் பொதுச்செயலாளராக சங்கரய்யா தேர்வானார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் “வெள்ளையனே வெளியேறு!” இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்தது. காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்யக் கோரி, மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார் சங்கரய்யா. பாளையங்கோட்டையில் நடந்த போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்தார். அக்டோபர் மாதத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,
தொழிலார்கள் உரிமைக்கான போராட்டம்:
1944-ல் சங்கரய்யா விடுதலையானதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கிருந்த ஹார்வி மில்லின் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், கூலி உயர்வுக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி கண்ட காலகட்டமாகும். கம்யூனிஸ்டுகள் மீது காங்கிரஸ்கார்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்த காலமாகும். கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்த காலமாகும். இந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரும் பங்காற்றினார் சங்கரய்யா. அப்போதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்படையினர் போராட்டமும் நடந்தது. இதை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இந்த ஆதரவுப் போராட்டத்தை மதுரையில் நடத்தினார் சங்கரய்யா. துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும் போராட்டம் நடந்தது. அதே காலத்தில்தான் மதுரைச் சதி வழக்கு போடப்பட்டு பி. ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள்.
சுதந்திர இந்தியாவில் சங்கரய்யா:
இந்திய சுதந்திரத்திற்கு முதல் நாள் தான் சங்கரய்யா விடுதலையானார். சுதந்திர இந்தியாவில் முன்பைவிட அதிக பொறுப்புகளுடன் பணியாற்றினார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், உயர் பொறுப்புகள் வந்துசேர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக, அனைத்திந்திய நிர்வாகி, 1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவவும், வேரூன்றவும் முக்கிய பங்காற்றியவர்களில் இவர் தவிர்க்க முடியாத நபராவார். 1964ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவாக காரணமாக இருந்த 32 பேரில் சங்கரய்யாவும் ஒருவராவார். ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக, தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 95வது வயதிலும் ஆணவக் கொலைக்கு எதிராக போராட்ட களம் கண்டார். பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுதாரணமாக ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.
தகைசால் தமிழர் சங்கரய்யா…!
சமூகத்திற்கான சங்கரய்யாவின் பணிகளை பாராட்டி, கடந்த 2021ம் ஆண்டு தகைசால் விருது அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் தகைசால் விருதை பெற்ற முதல் நபரும் அவர்தான். அந்த விருதுடன் வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார் சங்கரய்யா…!