திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் தமிழக அரசின் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இதன் விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள கிராமங்களில் 3174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த ஆளும் திமுக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அரசாணை வெளியிட்டதிலிருந்து விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் போராட்டம் நடத்தி வந்தது. இந்த நிலையில் அறவழியில் போராடிய வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட விவசாயிகள் ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனமும் கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியதாவது, “தமிழகம் முழுவதுமே விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அமைதியாக போராடும் திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், சட்ட உதவியும் தமிழக பாஜக வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.”
குண்டர் சட்டம் கைது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தை கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதை விட்டுவிட்டு விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டுமென தெரிவித்தார். இல்லாவிட்டால் நாம் தமிழர் கட்சி மீண்டும் களம் இறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரித்தார்.”
இதேபோன்று அமுமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.