இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக மிசோரம் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான வாக்காளர்கள் கிறித்தவர்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என மிசோரம் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் கிறித்துவ மாணவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சி என பல கட்சிகள் வேட்பாளர்களை இறக்கி உள்ளனர். மேலும் 27 தொகுதிகளில் சுயேட்ச்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டுமென மிசோரம் தலைமைத் தேர்தல் அதிகாரி மதுப் வியாஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையின் மீது தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் அதிகாரி, இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். எனவே, திட்டமிட்டபடி அறிவித்த தேதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறினார். இந்த பணியால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். ஆக, மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.