விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் தனியார் நிறுவனத்தில் பொருள் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். செஞ்சியில் வேலை முடித்துக் கொண்டு தனது சொந்த ஊரான ஆசூருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்பொழுது, தென்பேர் என்ற இடத்தில் மர்ம நபர் ஒருவர் இடைமறித்து லிப்ட் கேட்டு உள்ளார். ஜெய்சங்கரும் பின்னால் அமர வைத்து இருசக்கர வாகனத்தை இயக்கி வந்துள்ளார். சிறிது தூரம் கடந்த உடன் கழுத்தில் கத்தியால் குத்திய அந்த நபர் ஜெய்சங்கரிடமிருந்து ரூபாய் 7000 பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடி உள்ளார்.
கத்திக்குத்து பட்டு கீழே கிடந்த ஜெய்சங்கரை அந்த வழியே வந்த பொதுமக்கள் மீட்டு அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு பின்பு கத்தியால் குத்தி பண வழிப்பறி செய்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.