தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பலரும் உரிமம் பெற்று பட்டாசுக் கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே வாசு என்பவர் பட்டாசு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி ரூபாய் 64,000 மதிப்புள்ள பட்டாசுகளை வாங்கி உள்ளார். கடைக்காரர் பணம் கேட்டவுடன் Gpay மூலமாக பணம் செலுத்துவதாக கூறி பணம் செலுத்த முயன்றுள்ளார். பின் நெட்வொர்க் பிரச்சனை என்று கூறி, பட்டாசுகளை தான் கொண்டு வந்த காரில் அடுக்க சொல்லி உள்ளார். அதையும் நம்பி பட்டாசு கடைக்காரர் அதிகாரி தானே என நினைத்து காரில் பட்டாசுகளை அடுக்கி வைத்துள்ளார். பின்பு Gpay வேலை செய்யவில்லை அதனால் காரில் இருந்து பணத்தை எடுத்து வந்து தருகிறேன் என்று கூறி விட்டு சென்ற ஆசாமி காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கடைக்காரர் இரு இருசக்கர வாகனம் மூலம் துரத்தியுள்ளார். இருப்பினும் மர்ம ஆசாமியோ காரில் மாயமாக மறைந்து விட்டார்.
பின்னர் அடையாளம் தெரியாத அந்த மர்ம ஆசாமியின் மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் பட்டாசு கடைக்காரர் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.