தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மரக்காணம் சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மரக்காணம் அருகில் அமைந்துள்ள சிறுவாடி பகுதியில் வடிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே முடிக்கப்பட வேண்டிய இந்த பணிகள் மழைக்காலம் துவங்கியும் முடிக்கப்படாததால், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பிரதான சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீரால் வாகனங்களில் செல்லும் மக்கள் பெரிதும் அவதியுற்று உள்ளனர். கட்டுமான பணிகள் முடிவுறாததே இதற்கு முதன்மையான காரணம் என சிறுவாடி கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தேங்கி நிற்கும் மழை நீரை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.