கடந்த 2014ஆம் ஆண்டு திண்டிவனம் பகுதியில் மரக்காணம் ரோட்டில் சக்தி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் சீட்டுப் பணம் செலுத்தினால் பணத்திற்கான வட்டி அல்லது மனை வழங்கப்படும் என பொதுமக்களிடம் அறிவிப்பு செய்து பணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் அண்டப்பட்டு, கோட்டிக்குப்பம், வயலூர், நெற்குணம், சொக்கன்தாங்கல், சிறுவாடி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த 150’க்கும் மேற்பட்ட மக்கள் ரூபாய் 50 லட்சத்திற்கும் மேலாக பணம் கட்டியுள்ளனர். பணம் கட்டியவர்களுக்கு 2019ஆம் ஆண்டு வரை காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் கூறியவாறு காலக்கெடு முடிந்தும் வட்டியோ அல்லது மனையோ வழங்காததால் பொதுமக்கள் காவல்துறையில் புகார் செய்தனர்.
இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து இந்நிறுவனத்தை நடத்தி வந்த குப்புசாமியை கைது செய்தனர். மேலும் இந்நிறுவனத்திற்கு தொடர்புள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.