திண்டிவனம் அருகில் மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமித் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டும் கந்த சஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கி, ஒவ்வொரு நாளும் மூலவருக்கும், உச்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் நிகழ்ச்சியான இன்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட உற்சவர் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமி, வீரபாகுத்தேவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனைகள் மற்றும் பஞ்சமுக தீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராகவும், வீரபாகு ஆகிய சுவாமிகளுடன் கோவிலைச் சுற்றி வலம் வரும் காட்சி நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற கிராம பொதுமக்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.