தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் (RSS) ஊர்வலம் நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இந்த நிலையில் திண்டிவனத்தில் நேற்று மாலை 4 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறும் வீதிகளில் போலீஸ் பாதுகாப்பிற்காக மாவட்டம் முழுதும் இருந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இரவோடு இரவாக செஞ்சி ரோட்டில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருந்தது. செஞ்சி ரோட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கம் எதிரில் துவங்கிய ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
மேலும் திண்டிவனத்தில் உள்ள முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு இருந்தது. ஊர்வலத்தையொட்டி திடீரென குவிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. காவல்துறை பாதுகாப்புகள் அனைத்தும் எஸ்.பி. கசாங்காய் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.