மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாகத்திடம் மீட்பு வாகனம் ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாததால், புதுச்சேரி – திண்டிவனம் பைபாசில் நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களையும், வாகனத்தையும் அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலை வழியாக சென்னை, செஞ்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறுகலாக சாலை இருந்ததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் புதுச்சேரி – திண்டிவனம் இடையே 38.620 கி.மீ., துாரத்திற்கு 273.6 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி துவங்கியது.இதன் தொடர்ச்சியாக நான்கு வழிச்சாலைப் பணிகள் முழுவீச்சில் முடிந்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. மொரட்டாண்டியில் டோல்கேட் அமைக்கப்பட்டு, அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம், சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.டெண்டர் எடுக்கும் டோல்கேட் நிர்வாகத்தின் மூலம், சாலையை பராமரிப்பது, விபத்து நடக்கும் இடங்களில் சிக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவது. விபத்தில் காயமடைந்தோரை ஆம்புலன்சில் மீட்பது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களிடம் காரை மீட்பது முதல் கண்டெய்னர் கவிழ்ந்தால் மீட்பது வரை ராட்சத மீட்பு வாகனங்கள் உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது.ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட டோல் கேட் நிர்வாகம், தற்போது மந்த நிலையில் இருந்து வருகிறது.
புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலையில் விபத்து நடந்தால், உடனடியாக டோல்கேட் நிர்வாகத்தில் உள்ள மீட்பு வாகனம் (ஜே.சி.பி., மற்றும் ராட்சத கிரேன்) சம்பவ இடத்திற்குச் சென்று, வாகனங்களை மீட்டு வருவது முதன்மைப் பணியாக இருந்தது.ஆனால், கடந்த 2 மாதங்களாக இந்த சாலையில் நடக்கும் விபத்துகளுக்கும், டோல்கேட் நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாதது போல் இருந்து வருகிறது. மீட்பு வாகனத்தை இயக்கி வந்த டிரைவர் ஊதிய பிரச்னை தொடர்பாக பணியில் இருந்து நின்று விட்டார். அதன் பிறகு புதிய டிரைவரை டோல்கேட் நிர்வாகம் இதுவரை நியமிக்கவில்லை.இதனால் ஆரோவில், கிளியனுார், வானுார் எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் விபத்து நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து சென்று, காயமடைவோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அதுவரை விபத்து ஏற்பட்டு நடுரோட்டில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த, டோல்கேட் நிர்வாகத்திடம் மீட்பு வாகனம் வருவது இல்லை. அவர்களை போலீசார் அழைத்தாலும் சரியான பதில் கூறுவது கிடையாது.
இதற்கிடையே அப்பகுதியில் விபத்தில் சிக்கி நிற்கும் வாகனத்தின் அருகே மீண்டும் விபத்து ஏற்படாமல் இருக்க போலீசார் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாலையின் நின்று அவ்வழியாக அசுர வேகத்தில் வரும் வாகனத்தை நிறுத்தி ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.வெகுநேரமாக காத்திருக்கும் போலீசார், இறுதியாக தனியார் மீட்பு வாகனத்தை வரவழைத்து வாகனங்களை அப்புறப்படுத்தும் சூழல் உள்ளது.சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் டோல்கேட் நிர்வாகம், விபத்து நடக்கும் வாகனத்தை மீட்காமல் கைவிரித்து விட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார், டோல்கேட் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், மீட்பு வாகனத்தை ஓட்டுவதற்கு டிரைவரை நியமிக்காமல் பொறுப்பற்ற பதிலை கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தலையிட்டு, டிரைவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகவல் : தினமலர்