முகப்பு அரசியல் “சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி உள்ளேன்”

“சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகி உள்ளேன்”

திண்டிவனம் நகர மன்ற துணைத்தலைவர் பரபரப்பு புகார்

by Tindivanam News
caste discrimination at tindivanam municipality vice chairman accuses

பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக துணைத்தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

vice chairman rajalakshmi

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ( Tindivanam ) நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இந்நிலையில், துணைத்தலைவராக உள்ள ராஜலட்சுமி வெற்றிவேலுக்கு இதுவரை துனைத்தலைவருக்கான தனி இருக்கைகள் வழங்கவில்லை என்றும் நகராட்சி வளர்ச்சி பணிகளில் துணைத்தலைவரை அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை எனவும் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் பட்டியலின துணை தலைவர் என்பதால் தனக்குரிய மரியாதையை வழங்கவில்லை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் ஆட்சியரிடம் ராஜலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

வணக்கம் நான் மேற்படி திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறேன். நான் திண்டிவனம் நகராட்சியில் 22வது வார்டு நகர மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாக ஒலித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் பணி செய்து வருகிறேன். முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் 04.03.2022 அன்று திண்டிவனம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவராக பதவியேற்றேன். பதவியேற்றதிலிருந்து இன்று வரை நகர மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் நகர மன்ற துணைத் தலைவராகிய எனக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரவில்லை.

சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு ஆளாகி உள்ளேன்
நான் இதுகுறித்து நகர மன்ற தலைவர் இடத்திலும் நகராட்சி ஆணையரிடத்திலும் நகர மன்ற கூட்டத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தேன். நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் என்பதால் நகரமன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் நகர மன்றத் துணைத் தலைவராகிய எனக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர மறுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சியிலும் நகர மன்ற தலைவர் இருக்கைக்கு அருகில் நகர மன்ற துணைத் தலைவர் அமர்ந்து நகர மன்ற கூட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆனால் திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் மேற்கண்டவாறு சாதிய தீண்டாமையால் தொடர்ந்து ஒடுக்கு முறைக்கு ஆளாகிக் கொண்டு உள்ளேன்.

  இந்த விடயத்தில் மோடியும் ஸ்டாலினும் ஒன்றுதான் - சீமான் அறிக்கை

மறுக்கப்படும் உரிமைகளை பெற்று தாருங்கள்
மேலும் இதுவரை நகர மன்ற தலைவர் அவர்கள் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் வார்டுகளில் நடைபெறும் ஆய்வுகளுக்கு என்னை அழைப்பதே இல்லை. மேலும் திண்டிவனம் நகர வளர்ச்சி பணிகள் குறித்து நகர மன்ற துணைத் தலைவர் ஆகிய என்னிடத்தில் நகர மன்ற உறுப்பினர்களோடு இதுவரை கலந்து ஆலோசித்ததில்லை. நகர மன்ற தலைவர் அவர்கள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திண்டிவனம் நகரம் சார்ந்த திட்டங்களின் அனைத்து முடிவுகளையும் தன்னாட்சியாக எடுக்கிறார். எனவே ஐயா அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த எனக்கு மறுக்கப்படும் உரிமைகளை பெற்று தரும்படி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் குறிப்பிட்டார்.

தகவல் : ஏபிபி நாடு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole