உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் இணைந்தது. குழாய் செலுத்தும் பாதையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள துளையிடும் ‘ஆகா்’ இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றுவதற்கான பணியை இந்திய ராணுவத்தின் ‘பொறியாளா்கள் குழு’ வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா். உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.
செங்குத்தாக துளையிடும் பணிகள் தொடக்கம்:
மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. முதல் நாளில், 19 மீட்டா் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. எந்த இடையூறும் இல்லாத சூழலில், 100 மணிநேரத்தில் (4 நாள்கள்) தொழிலாளா்களை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் குறுக்கே உள்ள பாறைகளின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.