புதுச்சேரியில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே பொது போக்குவரத்துக்கு அதிகம் புழக்கத்தில் உள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆட்டோக்களில் கட்டணம் மிகவும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை முறைப்படுத்த மீட்டர் பொருத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தும் அதை பெரும்பாலான ஆட்டோக்களில் பொருத்துவதில்லை. இந்நிலையில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மீட்டர்கள் பொருத்தாத ஆட்டோக்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக வசூலிக்கும் ஆட்டோ உரிமைதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள், மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்காதவர்கள், அரசாணை மீறுவோருக்க மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். போக்குவரத்து துறை ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து 8.12.2016 ல் அரசாணை வெளியிட்டது.
அதன்படி முதல் 1.8 கி.மீக்கு குறைந்த பட்சம் ரூ.35, ஒவ்வொரு கூடுதல் கி.மீக்கு ரூ.18, காத்திருப்பு கட்டணமாக ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ரூ.5 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண அட்டவணை போக்குவரத்து துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள், பயணிகள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 1031க்கு தங்கள் புகார்களுக்கு அழைக்கலாம். போக்குவரத்து துறை இணையதளத்திலும் புகார் செய்யலாம்’ என அவர் தெரிவித்துள்ளார்.