திண்டிவனத்தின் நேரு வீதி மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும். இந்த சாலையில் தான் பழைய கோர்ட் வளாகம், காய்கறி மார்க்கெட், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என பலக்கட்டிடங்கள் உள்ளன. சென்ற 2013-14ஆம் நிதியாண்டில் திண்டிவனம் நகராட்சி சார்பில் 15 லட்ச ரூபாய் செலவில் நம்ம டாய்லெட் திட்டத்தின் மூலம் கழிவறைகள் நேரு வீதியில் கட்டப்பட்டது. இது மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இங்குள்ள கழிவறைகளுக்கு சரியாக தண்ணீர் வராததால் பயன்பாடின்றி மூடியே கிடக்கிறது. இதனால் வணிக வளாகங்களிலும், காய்கறி மார்க்கெட்டிலும் வேலை செய்வோர் இயற்கை உபாதை கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதனால் நேரு வீதியில் ஒதுக்கப்புறமாக உள்ள திறந்த வெளிகளில் இயற்கை உபாதை கழிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நம்ம டாய்லட்டை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.