ஆங்கில புத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி துவங்கியதையொட்டி உலகம் முழுவதிலும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. புவி நேரப்படி நியூசிலாந்து நாட்டில் முதலாவதாக புத்தாண்டு பிறந்தது. கவுண்ட் டவுன் முடிந்தவுடன் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள ஸ்கைடவரில் வானவேடிக்கைகள் விண்ணை பிளக்கும் அளவில் நிகழ்த்தப்பட்டன. அதனை மக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். அடுத்ததாக ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள துறைமுக பாலம் அருகே நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கை மக்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்திய நாட்டின் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைக்கட்டியது. இந்தியாவின் பிற நகரங்களிலும் முக்கியமாக டெல்லி, மும்பை, கொல்கட்டா, சென்னை போன்ற பெருநகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டை கொண்டாட மக்கள் குவிந்தனர். மேலும், இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிலும், பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வானவேடிக்கைகள் மிகவும் அழகாக அமைந்தன.
ஜப்பான் நாட்டில் பாரம்பரிய முறைப்படி மணி அடிக்கப்பட்டும், சீனாவில் வான வேடிக்கை மற்றும் பலூன்களை பறக்க விட்டும் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். அரபு நாடான துபாயின் புகழ் பெற்ற பபுர்ஜ் கலிப்பாவிலும் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.