திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கிரஷர் மற்றும் எம்.சாண்ட் ஆலைகள் அதிகமான அளவில் இயங்கி வருகின்றன. சமீப காலத்தில் ஜல்லி, எம்சாண்ட் விலை பன்மடங்கு உயர்ந்திருப்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஜல்லி, எம்சாண்ட், பிசாண்ட் ஆகிய பொருட்கள் டிப்பர் லாரிகள் மூலம் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த நிலையில் இந்த பொருட்களின் விலை உயர்வால் நாங்கள் பாதிக்கப்படுவதாகவும் விலையை குறைத்து விற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் 17ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திண்டிவனம் அருகில் ஜக்கம்பேட்டையில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தை டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் விலையை குறைக்க வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை ஆய்வாளர்கள் தரனேஸ்வரி, பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு சப்-கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கை மனுவை வழங்கி கலைந்து சென்றனர். தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மீண்டும் அனைவரும் சாலை மறியல் நடத்துவோம் என தெரிவித்தனர்.