மத்திய அரசு சார்பில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணி மேற்கொண்டார். இந்த அகழாய்வு பணியில் எண்ணற்ற அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.
இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து 982 பக்கமுடைய அறிக்கையாக அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார். அதன் பின்பு இந்த அகழ்வு பணியை ஸ்ரீராமன் என்பவரின் தலைமையிலான குழு மேற்கொண்டது. இந்த 3’ம் கட்ட அகழ்வு பணியில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஏதும் அறியப்படவில்லை.
தொடர்ந்து, 4 முதல் 9ம் கட்ட அகழ்வுப் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அகழ்வுப் பணிகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும், 982 பக்கமுடைய அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும் என மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், ”கீழடி அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு 9 மாதங்களில் வெளியிட வேண்டும் ” என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.