திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, தர்பூசணி காய்களும் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், மரக்காணம் அருகே ஒரு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி பழங்களை கத்தியால் வெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரக்காணம் அருகில் கந்தாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் பொற்குணன் (44) மற்றும் அவரது அண்ணன் கேசவன் (47). இவர்கள் இருவரும் அதே பகுதியில் மரக்காணம்-திண்டிவனம் சாலை ஓரம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர். தர்பூசணி பழங்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் வயல்களில் இறங்கி தர்பூசணி பழங்களை கத்தியால் வெட்டியும், இரும்பு கம்பியால் உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர்.
வயலில் இருந்த தர்பூசணி பழங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொற்குணன், மரக்காணம் காவல் நிலையத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தர்பூசணி பழங்களை மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி சேதப்படுத்தி விட்டதாக புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேதப்படுத்திய தர்பூசணி பழங்களை பார்வையிட்டு, சேதப்படுத்திய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.