காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் 84-ஆவது பிறந்த நாள் விழா பக்தர்களால் தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேல்மருவத்தூரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பல மாவட்டங்கிலிருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திண்டிவனம் ஈஸ்வரன் கோயில் தெருவில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. பங்காரு அடிகளாரின் 84வது பிறந்ததினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், சிறப்பு வழிபாட்டில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். வழிபாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பங்காரு அடிகளாரின் திருவுருவ படத்திற்கு தீபாராதனை காண்பித்தார். பின், வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.
இவ்விழாவில், திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகர், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா, திண்டிவனம் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.