இந்தியாவில் 18வது பாராளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 19’ம் தேதி துவங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 03’ம் தேதி நடைபெறும் என்று தலைமத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 324வது பிரிவின்படி, தேர்தல் அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்க தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், தேர்தல் கூட்டங்கள் எப்படி நடத்த வேண்டும் ?, தேர்தல் அல்லது பொது ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் ? என பலரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு அதிகாரிகள், ஏன் பொதுமக்களுக்கும் பொருந்தும்.
- தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில், ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளைச் செய்யக் கூடாது.
- தேர்தல் முடியும் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
- ஆட்சியில் உள்ள அமைச்சர்கள், அதிகாரப்பூர்வ கார்கள் உள்ளிட்ட வாகனங்களை, அரசு பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த வகையிலும், பொது நிதி, அவர்களுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
- கோவில், சர்ச், மசூதி, குருத்வாரா உள்ளிட்ட எந்த ஒரு வழிபாட்டு தலத்தையும் அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது.
- மதம், சாதி ரீதியில் உணர்வுகளைத் துாண்டும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது, பேசக் கூடாது.
- அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
- தேர்தல் ஓட்டுப்பதிவு நடப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய, 48 மணி நேரங்களில், எவ்வித கருத்துக் கணிப்பு, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது.
- ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர், ஓட்டுச்சாவடிக்கு, 100 மீட்டர் பரப்புக்குள் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை யாரும் எடுத்துச் செல்ல முடியாது.
- தேர்தல் காலத்தில் அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
- மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
இந்த விதிகளை மீறினால், இந்திய தண்டனை சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.