2024-2025 நடப்பாண்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் உரையின்போது “தமிழ் புதல்வன்” திட்டம், அதாவது 6 முதல் 12வது வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் எப்போது துவக்கப்படும் என தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
சமீபத்தில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பள்ளிபடிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” தொடக்க நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ் புதல்வன் திட்டம் பற்றி பேசினார்.
அவர் கூறியதாவது” உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தைப்போல், மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” விரைவில், இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் துவக்கப்படும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் 100 சதவீதம் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு அரசின் நோக்கம். இந்த திட்டத்தின் மூலம் இடைநிற்றல் குறையும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பயில கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. 2022ம் ஆண்டு துவங்கப்பட்டநிலையில் துவங்கப்பட்ட நிலையில்,
மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 20-25% கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கபட உள்ளது. பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை நிறைவேற்ற நடப்பு நிதியாண்டில் ரூ.360 கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி தமிழக அரசு பள்ளி மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் பயனடைய உள்ளனர்.