திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஆந்திரா, ஒடிசா போன்ற 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மோடி ஆட்சி அமைப்பார். சாதிவாரிக் கணக்கெடுப்பு பீகார், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
சமூகநீதி பற்றி சில அரசியல் காட்சிகள் அவ்வப்போது பேசினாலும், சமூகநீதி பற்றி விடாமல் மக்களுக்காக பேசுவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும்தான். சமூகநீதி விவகாரத்தில் தி.மு.க. அரசு செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் இடஒதுக்கீடை ஒரு மாதத்திலேயே நடைமுறை படுத்தமுடியும் ஆனால் இரண்டு ஆண்டுகளாக செய்யவில்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சியினருடன் பேசி முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்ற கர்நாடகா அரசின் முடிவிற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், ஆனால் அவரோ கூட்டணிக்காக அமைதியுடன் உள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா :
தமிழ்நாட்டில் கஞ்சா தெருவுக்குத் தெரு பரவிக் கிடைக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கஞ்சாவை புகைத்துவிட்டு பள்ளிக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டும், தமிழக அரசும், போலீசாரும் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. போலீசாருக்கு தெரிந்தே தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கஞ்சா தொடர்பாக கைது செய்யப்படுபவர்களும் மறுநாளே விடுதலை ஆகிவிடுகின்றனர். கஞ்சா கட்டுப்படுத்தவில்லை என்றால் தமிழ்நாட்டின் படுமோசம் ஆகிவிடும். இவ்வாறு ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.