தொழிலாளர்களின் ஓய்வூதிய சேமிப்பிறகான வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் இந்திய அரசால் சட்டமாக்கப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்ற அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்பில் (இபிஎஃப்ஓ) சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களாக உள்ளனர்.
கொரோனா பரவல் காலகட்டத்தில் தொழிலார்களின் பி.எப். நிதியிலிருந்து முன்பணம் பெருவதை எளிதாகும் வகையில் தானியங்கி நடைமுறையை EPFO அமைப்பு நடைமுறைபடுத்தியது. இதன்மூலம் மருத்துவ செலவிற்காக முன்பணம் கோரி விண்ணப்பித்தால் மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படும். எனினும், மருத்துவ செலவு தவிர்த்து கல்வி, திருமணம் போன்ற வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்தால் முன்பணம் பெற 20 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை இருந்தது.
தற்போது இந்தநிலையை மாற்றி எளிதான வழிமுறையை கொண்டவந்துள்ளது EPFO அமைப்பு. அதன்படி, இனிமேல் கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது போன்ற அவசர தேவைகளுக்கு முன்பணம் பெற வேண்டுமானால் ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் (AUTO MODE SETTLEMENT) எனப்படும் தானியங்கி நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம், உரிய ஆவணங்கள் கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படும் முன்பண விண்ணப்பங்கள் எந்தவித மனித தலையீடுகள் இல்லாமல் பரிசீலிக்கப்பட்டு, தானியங்கி முறையில் 3 நாட்களில் ரூ.1 லட்சம் வரை முன்பணம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியின்மூலம் இந்த ஆண்டில் சுமார் 2.25 கோடி உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.