திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்குமார் சிக்னல் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன், திண்டிவனம் ரயில்வே ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மணியளவில், சந்தீப்குமாரின் மனைவி இயற்கை உபாதைக்காக வெளியே சென்று, வீடு திரும்பியபோது, வீட்டின் உள்ளே வாலிபர் ஒருவர் போதையில் படுத்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி கூச்சலிட்டார். அலறல் சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த குடியிருப்புவாசிகள், அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பிடிபட்ட அந்த வாலிபர், திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியைச் சேர்ந்த பாலுமகேந்திரா, வயது 36 என்பது தெரியவந்தது. மேலும் பாலுமகேந்திரா காமாட்சியம்மன் தெருவில் பூக்கடை வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ரயில்வே ஊழியர் குடியிருப்பில் பாலுமகேந்திர தாக்கப்பட்ட விஷயத்தை அறிந்த அங்குள்ளவர்கள், கும்பலாக ரயில்வே குடியிருப்பில் புகுந்து, ரயில்வே ஊழியர் சந்தீப்குமார் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இதில் காயமடைந்த தம்பதி இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து பாலுமகேந்திரா மீது ரயில்வே ஊழியர் சந்தீப்குமார் நேற்று காலை திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சப் இன்ஸ்பெக்டர் சுதனிடம், சிலர் பஞ்சாயத்து பேசினர். அதையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பையும் போலீசார் அனுப்பி வைத்தனர் .
இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்.பி., உத்தரவின்பேரில், பாலுமகேந்திரா மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இவ்வாறு, திண்டிவனம் ரயில்வே ஊழியரின் வீட்டிற்குள் போதையில் புகுந்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.