இந்தியா நாடு தனது மக்கள்தொகை காரணமாக குகுப்பைகள் மற்றும் கழிவு மேலாண்மையில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கிறது. முக்கியமாக பூமியை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்னும் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அளவு என்பது உலக அளவில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள். இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா4-ம் இடம் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்துள்ளது.
இதிலிருந்து மீண்டுவர, இந்தியா நீண்ட கால கழிவு மேலாண்மைத் திட்டங்களுக்கு திட்டமிட வேண்டும். மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். மறுசுழற்சியை மிகவும் திறம்படச் செய்ய, வீட்டு மற்றும் நிறுவனக் கழிவுகள் மூலத்திலேயே பிரிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.