போதைப்பொருட்கள் நடமாட்டம் நாளுக்குநாள் கட்டுப்படுத்தமுடியாத அளவில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. நண்பர்களின் தவறான துாண்டுதல், மன அழுத்தம், போதிய அரவணைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் போதை பொருளின் பழக்கத்தில் பலர் அடிமையாகி விடுகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர். எனவே “கூல் லிப்” என்னும் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது சம்பந்தமாக, நீதிபதி கூறியதாவது, “பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘கூல் லிப்’ எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர். தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கூல் லிப்’-க்கு தடை விதிப்பது பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.