விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நொளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர வினோதினி. அதேபோல், உத்திரமேரூர் அருகில் குன்ன கொளத்தூரை சேர்ந்தவர் பாலாஜி, வயது 32. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் வினோதினியின் ஊரான நொளம்பூர் கிராமத்துக்கு விடுமுறையில் பாலாஜி வந்துள்ளார்.
ஊருக்கு வந்தவர், ஊரில் உள்ள நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். திண்டிவனம் அடுத்த வட கொளப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நொளம்பூர் அணிக்கும், கீழ்சேவூர் அணிக்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. அந்த போட்டியில் நொளம்பூர் அணிக்கு சார்பாக விளையாடிய பாலாஜி, பந்து வீச செல்லும்போது திடீரென மைதானத்திலேயே மயங்கி கிழே விழுந்துள்ளார்.
பின்பு, உடன் விளையாடியவர்கள் அவரை மீட்டு பிரம்மதேசம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலரிந்த பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவ்வாறு ஊருக்கு வந்த மாப்பிள்ளை, கிரிக்கெட் விளையாடச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.