பலருக்கு வெளிநாட்டு வேலை என்பது கனவாகவும், சிலருக்கு நல்ல ஊதியம் பெற வழியாகவும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலை என்பது இந்தக்கால இளைஞர்களின் கனவு. அதற்காக பெரு முயற்சி எடுத்து பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகளை அணுகி வேலை பெற்று வெளிநாட்டுக்கு பறப்பவர்களும் உண்டு.
இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய 25 டிராவல் ஏஜன்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இளைஞர், வெளிநாட்டு வேலை என்ற ஆசையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டிராவல் ஏஜென்சிகளின் கதவுகளை தட்டி உள்ளனர். ஆனால் அந்த ஏஜென்சிகள் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மொத்தம் 25 டிராவல் ஏஜென்சிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஏஜென்சிகள் அனைத்தும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் வேலை தருவதாக முகநூல், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகளையும், போலி வாக்குறுதிகளையும் நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை என்று தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பலரும் போலீசை நாடி வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வாறு, அமிர்தசரஸ், ஜலந்தர், ஹோசியார்புர், லூதியானா, பாட்டியாலா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.
இதையடுத்து, போலீசார் டிராவல் ஏஜென்சிகளில் அதிரடி சோதனை நடத்தியபோது, 25 ஏஜன்சிகள் உரிமம் இன்றி இயங்கி வந்ததும், வெளிநாட்டு வேலை என்று ஆசைகாட்டி ஏமாற்றியதும் தெரிய வந்தது.
இது குறித்து ஏ.டி.ஜி.பி., பிரவீன் சின்ஹா கூறியதாவது; “வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதற்கான உரிமங்கள் இந்த டிராவல் நிறுவனங்களிடம் இல்லை. மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு சட்ட விரோதமாக வேலைக்கு ஆட்கள் அனுப்பி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளோம். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை அளிக்கும் டிராவல் ஏஜன்சிகளை நம்ப வேண்டாம்”, இவ்வாறு அவர் கூறினார்.