சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவரும், தமிழ்நாடு மாநில முதல்வருமான முக.ஸ்டாலின், தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை; தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை என உரையைத் துவங்கினார்.
மேலும் அவர் கூறியதாவது, “தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன். தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால் திமுக 75ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள்; திமுகவின் பவள விழா எனது தலைமையில் கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெருமையாகும்.
பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கம்பீரமாக இருப்பதற்கு திமுகவின் அமைப்பு முறையே காரணம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது; எந்தவொரு மாநில அரசும் செய்யாதவகையில் தமிழகத்தை திமுக அரசு வளப்படுத்தி இருக்கிறது.
தலைவர், தொண்டர் என இல்லாமல் அண்ணன், தம்பி என்று கட்டமைக்கப்பட்ட இயக்கம் திமுக. கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி என்று கூட கேட்க முடியாத நிலை உள்ளது. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும்;2026 தேர்தல் தான் நமது இலக்கு.
இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை; தொண்டர்கள் மீதான நம்பிக்கையில் சொல்கிறேன் என கூறினார்.