திண்டிவனம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழியை ரயில்வே துறை சுவர் எழுப்பி நிரந்தரமாக மூடியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம் ரயில் நிலையத்திற்குச் செல்ல மேம்பாலம் அருகே பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதுமட்டுமின்றி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் காவேரிப்பாக்கம் தரைப்பாலம் வழி என 3 வழிகள் உள்ளது. இந்த 3 வழியையும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர்.
இதில், காவேரிப்பாக்கம் தரைப்பாலம் அருகே உள்ள வழியை நகர பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். பயணிகள் செல்லும் இந்த வழியில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்கள் கோழிக்கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வந்தனர்.
இதே போல் பலர் குப்பைக் கழிவுகள் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தனர். மேலும், ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழி இருள் சூழ்ந்து இருப்பதால், இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வந்தது. இதன் காரணமாக சமீபத்தில் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழி, தற்காலிகமாக மண் மற்றும் கருங்கல் வைத்து மூடப்பட்டது.
இந்நிலையில், திண்டிவனம் நேரு வீதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்ததால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் ரயில்வே நிர்வாகத்திற்கு வைத்த கோரிக்கையின் படி, ரயில்வே நிர்வாகம் தற்காலிகமாக திறந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ஊழியரின் வீட்டிற்குள், வாலிபர் ஒருவர் அதிகாலையில் புகுந்து ரகளை செய்ததில் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்புடைய நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்வே குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் சார்பில் காவேரிப்பாக்கம் தரைப்பாலம் அருகே, ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியை பொது மக்கள் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு நிரந்தரமாக சுவர் எழுப்பி மூடப்பட்டது.
இதனால் நகர பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் ரயில் நிலையத்திற்கு வரவேண்டும் என்றால், சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தகவல் : தினமலர்