பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை, தேசிய திரைப்பட விருதுகள் திரும்பப் பெற்றது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா.
இவர், 2022 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ‘மேகம் கருக்காதா..’ பாடலின் சிறந்த நடன காட்சிகளை அமைத்ததற்காக 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வென்றிருந்தார்.
இந்த நிலையில், ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றிய 21 வயது பெண் நடன உதவி இயக்குநரை, 2019 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜானி மாஸ்டர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து தெலங்கானா காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான விருதை திரும்பப் பெறுவதாகவும், அவர் மீதான வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை விருது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்துள்ளது. புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் செவ்வாய்க்கிழமை (அக். 8) விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.