உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால் அதனை கொண்டு கட்டிடம் எழுப்புங்கள் என்ற, முதுகில் தட்டிக் கொடுக்கும் வரிகளுக்கு சொந்தக்காரர் ரத்தன் டாடா. அப்படி ஒரு தன்னம்பிக்கையுடைய மிகப்பெரும் தொழில் அதிபர்… உலகையே ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் ரத்தன் டாடா. இவர் மீது வீசப்பட்ட ஒவ்வொரு கற்களும் இன்று வைரமாய், தொழிற்துறையில் ஜொலித்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் தொடங்கிய தனது வியாபார குழுமத்தினை, உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர் ரத்தன் டாடா.
நாம் சாப்பிடும் உணவில் போடும் உப்பில் தொடங்கி, டீ, கைக்கடிகாரம், நம் வீட்டுச் சுவற்றில் உள்ள இரும்பு, டிடிஹெச், நகை, டாடா பவர், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், தாஜ் ஹோட்டல்ஸ் என ஒவ்வொன்றிலும் டாடாவின் வணிகம் கோலோச்சுகிறது.
ரத்தன் டாடா, தனது நிர்வாக மேல்படிப்பை அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழக்கத்தில் படித்தவர். படிப்பை முடித்தவுடன் இன்றளவும் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஐபிஎம்மில் பணிக்கு சேர்ந்தவர். எனினும் தாய் நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்தியாவுக்கே திரும்பினார். இதன் பிறகு தனது குடும்ப வணிகத்தில் இறங்கினார். டாடா குழுமம் இவரின் சொந்த நிறுவனமாகவே இருந்தாலும், சிறு சிறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதனால் வெற்றியின் ரகசியத்தினையும் தெரிந்து கொண்டுள்ளார்.
எனினும் 30 வருட அயராத கடின உழைப்பின் வெற்றிக்கு பின்னர், 1991ல் டாடா குழுமத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகே டாடா குழுமம் அசுர வளர்ச்சியினைக் கண்டது. இதன் பின்னர் தான் இந்தியாவில் குறிப்பிடத்தக்க குழுமங்களில் ஒன்றாக டாடா குழுமம் உருவெடுத்தது. சர்வதேச சந்தையில் தங்களது நிறுவனத்திற்கான வாய்ப்புகளை தேடிப்பிடித்து கண்டுபிடித்தார். குறிப்பாக இரும்பு, ஐடி துறை, கெமிக்கல், டீ, கார்கள் என பலவற்றிலும் வெற்றிகரமாக தனது வர்த்தகத்தினை விரிவுபடுத்தினார். இவரின் தலைமைக்கு பின்பு டாடா குழுமம் பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். பல துறைகளையும் தனது வணிகத்தில் உட்புகுத்தினார்.
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) இன்றளவிலும் இந்தியாவில் ஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இது பல ஆயிரம் ஊழியர்களுக்கு வாழ்வளித்து வருகிறது. இந்தியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளிலும் தனது விரிவாக்கத்தினை செய்து வருகின்றது டிசிஎஸ். ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் வருவாயை கண்டு வரும் ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனமாகும்.
டாடா வாகன தயாரிப்பினை பொறுத்தவரையில் அதிலும் தனக்கென ஒரு தனி அந்தஸ்தினை கொண்டுள்ளது. அதிலும் சொகுசு கார் தயாரிப்புகளுடன் கூட்டு சேர்ந்து அதிலும் வெற்றிகரமாக உற்பத்தியினை செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் ஒரு கார் வாங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது டாடா நானோ தான். இதனால் நடுத்தர மக்களின் கார் கனவு மிக எளிதாக நிறைவேறியது என்றே கூறலாம்.
இரும்பு துறையிலும் தனது காலடியை பதித்த டாடா, சர்வதேச அளவில் இரும்பு வணிகத்தினையும் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. உலகின் சில நிறுவனங்கள் இந்தியாவினை தேடி வர, சத்தமேயில்லாமல் தனது வணிகத்தினை உலகின் பல நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வந்தார். சொல்லப்போனால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இவரின் பங்கும் கணிசமாக உண்டு. ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷன் விருதும், பத்மவிபூஷன் விருதும் வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.
ஒரு சமயம் டாடா சுமோ கார்கள் தங்களுக்கு வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்கு கொடுக்க, பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது என நிராகரித்து விட்டாராம் டாடா. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஆர்டர் கிடைத்தால், எந்த நிறுவனமேனும் விட்டுக் கொடுக்குமா என தெரியவில்லை. ஆனால் அந்தளவுக்கு தாய் நாட்டின் மீது பற்று கொண்டவர் டாடா.
இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு முன்னோடியான ரத்தன் டாடா, தொழில் நுணுக்கங்களையும் இளைஞர்களுக்கு பயிற்றுவித்தவர். ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுதிறனாளிகள் என பல லட்சம் பேருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளை செய்து கொடை வள்ளல் என பெயரெடுத்தவர் ரத்தன் டாடா. கொரோனா நிவராண நிதியாக 1,500 கோடி ரூபாயினை வழங்கியவர்.
ரத்தன் டாடாவும் காதலில் விழுந்தவர் என்றால் நம்ப முடிகிறதா? இதனை அவரே மும்பையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் தோல்வியுற்ற டாடா, அதனை எண்ணி கலங்காமல், தொலை நோக்கு பார்வையால் வணிகத்தில் கவனம் செலுத்தி வெற்றி கண்டவர். தனது இளம் வயதில் தாய் தந்தையரின் விவாகரத்துக்கு பின்பு பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் கூறியவர் ரத்தன் டாடா. ஆக பிரச்னைகள், கவலைகள் பற்றி ரத்தன் டாடா சிந்தித்திருந்தால், இப்படி நாம் பேசுவோமா? இதுவே ரத்தன் டாட்டா நமக்கு செல்லும் வாழ்வியல் தத்துவம்…