சென்னையில் திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள் மரக்காணம் போன்ற பகுதிகளில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தன. கடலுக்குள் இருந்து கரையை நோக்கி வந்த அலைகள் ஃப்ளோரசன்ட் நீலத்தில் ஜொலித்தது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. இந்த நேரத்தில் கடற்கரையில் இருந்த பலர் இதை வீடியோ எடுத்து தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.
எதனால் இப்படி நிகழ்ந்தது என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பத் துறை தலைவர் பேராசிரியர் சுதாகர் சுப்ரமணியம் அவர்களிடம் கேட்டோம்.
”இதற்கு ‘நாட்டிலுக்கா சென்டிலன்ஸ்’ (Noctiluca scintillans) என்கிற உயிரிதான் காரணம். இதுவும் அமீபா போலவே ஒரு செல் உயிரிதான். இது கடலில் வாழும். இதை ‘கடல் ஒளிர்வி’ என்று குறிப்பிடுவோம். மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதற்குக் காரணம், அவற்றின் உடலில் இருக்கிற என்சைம்தான். அதேபோல, இவற்றின் உடலில் லூசிஃபெரஸ் (luciferase) என்கிற என்சைம் இருக்கிறது. லூசிஃபெரின் (Luciferin) என்கிற வேதிப்பொருளும் இருக்கிறது. இந்த வேதிப்பொருளில் மெக்னீஷியமும், அடினோசின் ட்ரைபாஸ்பேட் (ATP)டும் இருக்கின்றன. இந்த என்சைம் மற்றும் வேதிபொருள் இருப்பதால்தான், இந்த உயிரியின் உடல் நீல நிறத்தில் ஒளிரும் தன்மையுடன் இருக்கிறது. இதற்கு இரண்டு வால்கள் உண்டு. அதை ‘ஃபிளாஜெல்லா’ என்போம். அந்த வால்களை சுழற்றி சுழற்றித்தான் இந்த உயிரி ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகரும்.
இந்த உயிரியின் தகவமைப்பு கடலில் வாழ்வதற்கு மிகப் பொருத்தமாக இருப்பதால், கடலில் இது கோடிக்கணக்கில் வளர்ந்து இருக்கின்றன. ஒரு குறிப்பிட்டப் பகுதியில் இது பல்கிப் பெருகி காலனியாக விட்டால், அந்தப் பகுதியின் அலை ஃப்ளோரசன்ட் நீல நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வு பயோலுமினெசென்ஸ் (bioluminescence) என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிரி கடற்கரையிலும் குவிந்து இருக்கும். இதைத் தொட்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது” என்கிறார் சுதாகர் சுப்ரமணியம்.