புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனத்தில் ரூ.27.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் கடந்த 4ஆம் தேதி முதல்வரால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்குப் பிறந்த நாளே, புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக ஆட்டோ டிரைவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டதால், மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனை போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் திண்டிவனம் நகரின் அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தங்கள் ஆட்டோக்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். ஆட்டோக்களை அலுவலகம் எதிரே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆட்டோ சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், நகராட்சி கமிஷனர் பானுமதி மற்றும் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்க முயன்றனர். ஒரே நேரத்தில் பலர் மனு அளிக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி கமிஷனர், ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.