முகப்பு குற்றச்செய்திகள் திண்டிவனம் அருகே காதலி குறித்து அவதூறு பேச்சு – நண்பரை கல்லால் தாக்கி கொன்ற இளைஞர் கைது

திண்டிவனம் அருகே காதலி குறித்து அவதூறு பேச்சு – நண்பரை கல்லால் தாக்கி கொன்ற இளைஞர் கைது

by Tindivanam News

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலி குறித்து அவதூறாக பேசியதாக ஏற்பட்ட தகராறில், இளைஞரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அருகிலுள்ள அகூர் கிராமத்தில் தங்கி பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் சசிகுமார் (22). இவரது சொந்த ஊர் வடசிறுவளூர். மனைவி விஷ்ணுபிரியாவும், ஒரு குழந்தையும் உள்ளனர். மேலும், விஷ்ணுபிரியா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி அவரது மனைவி வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை தொடங்கினர்.

விசாரணையில், சம்பவத்தன்று சசிகுமார் தனது நண்பர்களான ஜெகதீசன் (21), ஜெகன் (21) ஆகியோருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதில், ஜெகதீசனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ஜெகதீசன் காதலித்து வந்த பெண்ணைப் பற்றி சசிகுமார் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஜெகதீசன் மற்றும் ஜெகன் இணைந்து சசிகுமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, தணியல் கிராமம் அருகே உள்ள ஒதுக்குபுறமான இடத்தில் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  குட்கா ரெய்டு நடத்தி 10 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பின்னர், உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று பந்தக்கல்லு பகுதியில் பாறைகளுக்கு இடையில் வீசி தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

ஜெகதீசன் அளித்த தகவலின் அடிப்படையில், அழுகிய நிலையில் இருந்த சசிகுமாரின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெகதீசன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஜெகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole