விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் விவசாய தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும் விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யவும் வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் செல்வதுண்டு. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கால்மார்க்ஸ் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் ஒலக்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ள தாதாபுரம், சாரம், பட்டினம் ஆகிய கிராமங்களிலும், மயிலம் வட்டாரத்தில் அமைந்துள்ள பாமுண்டி கிராமத்திலும் உள்ள தரிசு நிலங்களை பயிர் வைப்பதற்கு ஏற்ற நிலமாக மாற்றுவது குறித்தும் நீர் ஆதாரத்தை பெருக்குவது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த விவசாயிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திண்டிவனம் உழவர் சந்தை பகுதியை வேளாண்துறை இயக்குனர் கண்ணகி மற்றும் தோட்டக்கலை துணை இயக்குனர் கால்மார்க்ஸ் இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருட்களின் தரத்தை பார்வையிட்டதோடு, உழவர் சந்தைக்கு வரும் காய்கறி மற்றும் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கினர். இந்த ஆய்வுகளின் போது அந்தந்த ஊரில் உள்ள விவசாய மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.