செஞ்சி, திண்டிவனம் மற்றும் மேல்மலையனூர் தாலுக்காவில் 80 சதவீதம் மேலானோர் விவசாயத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் கிணற்று பாசனத்தையே நம்பியுள்ளனர். இந்த மூன்று தாலுகாவிலும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆறுகள் எதுவும் இல்லை. ஆக, செஞ்சி பகுதியில் உருவாகும் வராகநதி, மேல்மலையனூர் பகுதியில் உருவாகும் சங்கராபரணி ஆறு மற்றும் தொண்டூர் பகுதியில் உருவாகும் தொண்டி ஆறு மட்டுமே இப்பகுதிகளுக்கான முதன்மையான நீர் ஆதாரமாக இருந்து வருகின்றன.
குறிப்பாக விவசாய கிணறுகளுக்கு இந்த மூன்று ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் மட்டுமே முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. வராகநதியில் வரும் மழை வெள்ளம் காரணமாக ஆண்டுதோறும் சங்கராபரணி ஆற்றில் செஞ்சியை கடந்து வெள்ளம் செல்கிறது. பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினால் வீடூர் அணை விரைவாக நிரம்பி உபரி நீர் கடலிற்கு சென்று வீணாகிறது. பருவ மழை நின்றதும் சங்கராபரணியில் தண்ணீர் செல்வதும் நின்றுவிடும், அதனால் அருகில் இருக்கும் கிணறுகளும் காய்ச்சல் காலங்களில் தண்ணீர் வத்தி விடுகிறது.வெள்ளம் நின்ற சில காலங்கள் தவிர்த்து கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விடும். இதனால் கோடையில் விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து அடி மட்டத்திற்கு சென்று விடும். கோடை காலங்களில் பயிர்களை மீட்க முடியாமல் விவசாயிகள் ஆண்டுதோறும் திணறி வருகின்றனர். இதுபோன்ற காலங்களில் செஞ்சியில் உள்ள விவசாயிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி தங்கள் நிலத்திற்கு பாசனம் செய்து வருகின்றனர்.
இதனை தவிர்க்க சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டித் தருமாறு பல ஆண்டு காலமாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல்களிலும் இந்த கோரிக்கைகள் அனைத்து கட்சியினரிடமும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்களும் அரசியல் கட்சியினரும் சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் மஸ்தான் அவர்கள் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.