ஆண்டுதோறும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும். இந்த வருடமும் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடிக்கு நடவு செய்து 40 முதல் 50 நாட்கள் கடந்துள்ளது. இந்த நிலையில் நெற்ப்பயிர்களில் கதிர்கள் வரும் சூழ்நிலையில் நெற்பயிர்களை இலைச் சுருட்டுப் புழுக்கள் தாக்கி பயிர்களை சேதம் செய்வது விவசாயிகளை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இலைச் சுருட்டுப் புழுக்கள் நெற்பயிர்களில் உள்ள பச்சையத்தினை உணவாக எடுத்துக்கொண்டு வளர்கின்றன. நெற்பயிர்களை தாக்கும் பூச்சி இனங்களில் இலைச் சுருட்டுப் புழு, பச்சைத் தத்துப்பூச்சி, கூட்டுப்புழு உள்ளிட்டவை அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கதிர்கள் வரும் நிலையில் இவ்வாறான பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் வேளாண்மைத்துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காக்க விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நெற்பயர்களுக்கு என்ன விதமான மருந்துகள் அளிக்க வேண்டும் என்பதனையும் தெரிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “நாங்கள் நடவு செய்து 40 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் இப்போது நெற்பயிர்களை இலைச் சுருட்டுப் புழுக்கள் அதிக அளவில் தாக்குகின்றன. நாங்கள் பலவிதமான மருந்துகள் தெளித்தும், எந்த பயனும் இல்லை இதனால் மகசூல் குறையும் என வருத்தத்தில் உள்ளோம்.
அதனால், வேளாண்மைத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பூச்சித் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்ற உரிய பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்க ஆவண செய்ய வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர்”.