திண்டிவனத்தை சுற்றி பெரும்பான்மையான விவசாயிகள் நெற்பயிற் மகசூலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நெற்பயிர் மகசூல் போட்டி ஆண்டுதோறும் வேளாண்மை துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரித்திடும் பொருட்டு பயிர் மகசூல் போட்டித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் தங்கள் பெயர்களையும், பகுதிகளையும் முன்னரே பதிவு செய்ய வேண்டும். அதன்படி பதிவு செய்த விவசாயிகளின் நிலங்களில் அறுவடை காலத்தில் வேளாண் துறை அலுவலர்களால் பயிர் மகசூல் கணக்கிடப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தென்பசியாறு கிராமத்தைச் சேர்ந்த அன்பின் பொய்யாமொழி என்ற விவசாயின் நிலத்தில் 50 சென்ட் அளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. நன்கு வளர்ந்துள்ள நெற்பயிர்களின் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நெல் மகசூலை கணக்கிடும் பணியை, விழுப்புரம் மாவட்டம் வேளாண்துறை இயக்குனர் பெரியசாமி தலைமையில் கண்காணிக்கப்பட்டது. இதேபோல் பல இடங்களில் பயிர் மகசூல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதிகமாக மகசூல் பெறும் முதல் இரண்டு விவசாயிகளுக்கு தலா ரூ.15,000, ரூ.10,000 அரசு நிகழ்ச்சியில் ரொக்க பரிசாக வழங்கப்படும்.