விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், 18வது தவணைக்கான 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பும், ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ அதாவது ‘பி.எம்., கிசான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுதும் உள்ள சிறு, குறு விவசாயிகளை இலக்காக வைத்து, அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை 17 தவணைகளாக இந்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கான 18வது தவணை தொகை விடுவிக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவின் வாஷிமில் நடந்த நிகழ்ச்சியில், இதற்காக 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இதன் வாயிலாக நாட்டில் உள்ள 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளை மேம்படுத்தும் விதமாக, 23,300 கோடி ரூபாய் முதலீட்டிலான பல திட்டங்களையும் பிரதமர் அறிவித்தார்.