திண்டிவனம் பகுதியை சுற்றி பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் (கமிட்டி), திண்டிவனத்திலுள்ள செஞ்சிரோடு பகுதியில் இயங்கிவருகிறது. தற்போது சில நாட்களாக பனிப்பயறு, உளுந்து மற்றும் மணிலா ஆகிய பயிர்கள் அதிக அளவில் வரத்து உள்ளது. மேலும் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைத்துவந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு 100 கிலோ எடையுள்ள பனிப்பயிர் மூட்டை ஒன்று ரூபாய் 7 ஆயிரத்துக்கும், உளுந்து மூட்டை ஒன்று ருபாய் ஆயிரத்து 600’க்கும் வியாபாரிகளால் விலை வைக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது, திடீரென்று பனிப்பயறு 6 ஆயிரத்து 600க்கும், உளுந்து 9 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விலை குறைக்கப்பட்டு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை 6:30 மணியளவில் கமிட்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த தீடீர் விலை சரிவு எங்களுக்கு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். பின்பு போராட்ட இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் கூட்டத்தை கலைத்தனர்.