தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 150க்கும் மேற்பட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலக உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இதற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சீவியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய புகழ் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அந்தச் சான்றிதழில், இந்திய திரையுலகில் மிகவும் படைப்பாற்றல் மிக்க நட்சத்திரம்-நடிகர் மற்றும் நடனக் கலைஞர் சிரஞ்சீவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி சிரஞ்சீவியின் முதல் படம் வெளியான நிலையில், அவர் திரைத்துறையில் 45-ஆவது ஆண்டை நிறைவு செய்த நாளில் இந்த பெருமை கிடைத்துள்ளார். இந்த கின்னஸ் சாதனையை எதிர்பார்க்கவே இல்லை என நடிகர் சிரஞ்சீவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.