முகப்பு புகார்ப்பெட்டி நிதி நிறுவனம் நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களிடம் மோசடி

நிதி நிறுவனம் நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களிடம் மோசடி

ரூ.1½ கோடி மோசடி செய்தவர்மேல் நடவடிக்கை எடுக்க மனு

by Tindivanam News
fraudster dorged retired government pensiners in tindivanam

திண்டிவனத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தனர்.

திண்டிவனம் அண்ணா நகர், இந்திரா நகர், நல்லியகோடான் நகர், நாரேரிக்குப்பம், பெரமண்டூர், வெங்கந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான ஞானசேகர், சந்திரசேகர், கணேஷ், ராஜாமணி, கோவிந்தசாமி, ஜெயராமன், கலியபெருமாள், அறவாழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திண்டிவனத்தில் எட்டியம்மாள் டிரேடர்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை ரவி (வயது 55) என்பவர் நடத்தி வந்தார். அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 2 பைசா வட்டி தருவதாக விளம்பரம் செய்தனர். இதையறிந்த நாங்கள் எங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மூலமாக கிடைத்த பணத்தை கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை முதலீடு செய்தோம். இதை பெற்ற ரவி, எங்களுக்கு மாதம் தவறாமல் வட்டி கொடுத்து வந்தார். 1.6.2022 முதல் எங்களுக்கு வட்டிப்பணம் கொடுப்பதை திடீரென நிறுத்திவிட்டார். இதனால் நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். நாங்கள், ரவியிடம் சென்று தாங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பித்தருமாறு பலமுறை வற்புறுத்தி கேட்டோம். அதற்கு அவர், வேறொரு இடத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளேன், பணம் வந்தவுடன் தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார்.

  கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்

ஆனால் அவர், எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராததால் நாங்கள் மீண்டும் பலமுறை சென்று அவரிடம் வற்புறுத்தி கேட்டதற்கு பணம் தர முடியாது என்றும், எந்த போலீஸ் அதிகாரியிடம் சென்று புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறி அடியாட்களை வைத்து எங்களை மிரட்டி வருகிறார். எங்களிடம் மொத்தம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 36 ஆயிரத்து 800-ஐ ரவி மோசடி செய்துவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவைப்பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சசாங்சாய், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole