திண்டிவனம் காவேரிப்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் ஊற்று நீரால் பொது மக்கள் அவதியடைவதால், நகராட்சி நிர்வாகம் ஊற்று நீரை தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பொது மக்கள், நகரப்பகுதிக்கு அங்குள்ள எம்.ஆர்.எஸ்.ரயில்வே கேட் வழியாக வந்தனர். ரயில் வரும் நேரத்தில் கேட் மூடப்படும். இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிரமத்தை தினந்தோறும் சந்தித்து வந்தனர்.
இதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காவேரிப்பாக்கம் பகுதியில், ரயில்வே சுரங்கப்பாதை(தரைப்பாலம்) அமைத்துக்கொடுத்தது. இதனால் காவேரிப்பாக்கம் பகுதி மக்கள் இல்லாமல், மற்ற பகுதியிலிருந்து வரும் பொது மக்கள் காவேரிப்பாக்கம் சுரங்கப்பாதை வழியாக நகரப்பகுதிக்கு வருகின்றனர்.
மழைக்காலம் வந்து விட்டால், சுரங்கப்பாதையில், மழை நீர் மட்டுமல்லாமல், சுரங்கப்பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள சுவற்றின் சந்து வழியாக ஊற்று நீர் தொடர்ந்து வழிந்து, குளம் போல் தேங்கி நிற்கும். குறிப்பாக மழைக்காலத்தில் காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பும் போது, சுரங்கப்பாதையில் ஊற்று நீர் வழிந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கிவிடும்.
இந்த சமயத்தில் தேங்கி நிற்கும் நீர் அனைத்தும், நகராட்சி மூலம் மின்மோட்டார் வைத்து வெளியே ஏற்றப்படும். இதுமாதிரி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நகராட்சி ஊழியர் மூலம் தேங்கியுள்ள நீர் பைப் மூலம் வெளியேற்றப்படுவது வழக்கமாக நடந்து வருகின்றது. இதனால் நகராட்சிக் கூடுதல் செலவாகின்றது.
ஊற்று நீரை குறித்த நேரத்தில் வெளியேற்றாவிட்டால், அதிக அளவில் ஊற்று நீர் சுரந்து குளம் போல் தேங்கிவிடும். இந்த சமயத்தில் சுரங்கப்பாதை வழியாக பொது மக்கள், வாகனங்கள் வரமுடியாது. இந்த நேரத்தில் பொது மக்கள் வழக்கம் போல மேம்பாலம் வழியாக சுற்றிக்கொண்டுதான் நகரப்பகுதிக்கு செல்ல வேண்டும். சுரங்கப்பாதையிலிருந்து நிற்காமல் வெளியேறும் ஊற்று நீரை தடுக்கும் வகையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.