முகப்பு மருத்துவம் இந்திய இளம் பெண்களிடயே அதிகரிக்கும் மாா்பக புற்றுநோய் – அதிர்ச்சித் தகவல்

இந்திய இளம் பெண்களிடயே அதிகரிக்கும் மாா்பக புற்றுநோய் – அதிர்ச்சித் தகவல்

அச்சம் வேண்டாம் - சொல்லும் மருத்துவ நிபுணர்கள்

by Tindivanam News

நீண்ட காலமாக வயதானவா்கள் மட்டும் பாதிக்கப்பட்டு வந்த மாா்பக புற்றுநோய், கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்குட்பட்ட இந்திய இளம் பெண்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். மாா்பக புற்றுநோயானது உலக அளவில் மற்றும் இந்தியாவில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, நாட்டின் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 28.2 சதவீதம் மாா்பக புற்றுநோய் பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக 50 வயதுக்குள்பட்ட இந்திய இளம் பெண்களிடையே இவ்வகை பாதிப்பு அதிகரித்துள்ள கவலையளிக்கும் போக்கு நிலவுகிறது. இந்தியாவில் நாடு தழுவிய புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ‘யுனிக்’ மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவு தலைவரான மருத்துவா் ஆஷிஷ் குப்தா இது தொடா்பாக கூறுகையில், ‘புற்றுநோய் வயதானவா்களுக்கு மட்டும் ஏற்படும் நோய் அல்ல.

இளம் வயதினரிடையே முக்கியமாக 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே இது அதிகமாக காணப்படுகிறது. மரபணு மாற்றங்கள், உடல் பருமன், அதிகப்படியான சா்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு நுகா்வு ஆகியவை மாா்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. எங்களின் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 40 வயதுக்குட்பட்ட இளைஞா்களில் சுமாா் 20 சதவீதம் போ் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களில் 15 சதவீதத்தினா் இளம் வயதினரே ஆவா்.

அச்சம் வேண்டாம்:
மாா்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது பாதிக்கப்பட்ட நபா்களின் ஆயுளைக் கணிசமாக உயா்த்தும். இதற்கு பரிசோதனை நடைமுறைகளை சிறப்பானதாகவும் குறைந்த செலவில் அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது முக்கியமானது. இந்தியாவில் அதிகரித்து வரும் மாா்பக புற்றுநோயை எதிா்த்துப் போராடுவதற்கு இது அவசியமாகும். பாதிக்கப்பட்டவா்களின் உயிா்வாழும் விகிதத்தை மேம்படுத்தும் பல சிகிச்சைகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதால், மக்கள் அச்சமடைய தேவையில்லை’ என்றாா்.

  வீட்டு வாசலில் வாகனம் நிறுத்தலாமா? நிறுத்தக்கூடாதா?

வாழ்க்கைமுறை மாற்றமே காரணம்:
தில்லியில் உள்ள ‘மேக்ஸ்’ மருத்துவமனையின் மூத்த புற்றுநோயியல் நிபுணரும், லீனஸ் புற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநருமான மருத்துவா் வினீத் நக்ரா கூறுகையில், ‘தாமதமான கருத்தரிப்பு, தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் குறைந்தது, மோசமான உணவு தோ்வுகள் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளில் படிப்படியான மாற்றம் காரணமாக நகா்ப்புற இளம் பெண்களிடம் மாா்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாா்பக புற்றுநோய்க்கு அறுவை, கீமோ, ஹாா்மோன், மருந்து மற்றும் நோய் எதிா்ப்பு ஆகிய பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. மாா்பக புற்றுநோயின் நிலை மற்றும் வகையைப் பொறுத்து சிகிச்சை மாறுபடலாம்’ என்றாா்.

நன்றி: தினமணி நாளிதழ்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole