சமீபகாலமாக நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளில் தமிழகம் முழுவதும் பல வரலாற்றுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது, செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் 15’ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செஞ்சி அருகில் 3 கி.மி தொலைவில் அமைந்துள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணா்வு குழு கள ஆய்வு மேற்கொண்டது. இந்த குழுவில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணா்வு மன்றத் தலைவா் லெனின் மற்றும் செயற்குழு உறுப்பினா் சா.வடிவேல், ராஜாதேசிங்கு அரசுப் பள்ளி ஆசிரியா் தே.பாலமுருகன், வரலாற்று ஆா்வலர் நா.முனுசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜெயங்கொண்டான் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொள்ளும்போது நடுகல் ஒன்றை கண்டெடுத்தனா். இந்த நடுகல் அளவில் சுமாா் ஒரு மீட்டா் உயரமும், 50 செ. மீ. அகலமும் கொண்ட கருங்கல்லில் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. காலவரைவில் சுமாா் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு குதிரையின் மீது ஒரு வீரன் வலது கையில் போா்வாளை மேலே தூக்கிப்பிடித்த வாரும், இடது கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் நம்மை பாா்ப்பது போல் அமா்ந்துள்ளான். வரலாற்றில் இந்த நடுகற்கள் போரில் வீர மரணமடைந்த வீரனுக்காக எடுக்கப்படுபவையாகும். தற்போது இந்த நடுகல் ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளது.
15’ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லை அந்த ஊர் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.