முகப்பு அறிவிப்புகள் கரும்பு விவசாயிகளுக்கு வந்த இனிப்பு செய்தி – ஊக்கத்தொகை அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு வந்த இனிப்பு செய்தி – ஊக்கத்தொகை அறிவிப்பு

ரூ.247 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு

by Tindivanam News

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரித்து நலிவடைந்த நிலையில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது.

அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணையின்படி வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் 2024-25 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மத்திய அரசு 2023-24 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247.00 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன்னுக்கு ரூ.3134.75/- அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ 3134.75/- விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் வேண்டும்

2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247.00 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole