கடற்பகுதியில் எந்த அறிவிப்பும் முன் எச்சரிக்கையும் இல்லாமல், கடலில் ஏற்படும் பலத்த காற்றின் விளைவு – “கல்லக்கடல்” என அழைக்கப்படுகிறது. இந்த கல்லக்கடல் நிகழ்வின்போது கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும், ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அரிதாக இந்த “கல்லக்கடல்” காற்று ஏற்படுவது உண்டு. அதுபோன்று ‘கல்லக் கடல்’ எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநேரத்தில், கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அரசு அறிவுறுத்தியுள்ளது.