விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் கன்னியம்மாள் (17). இவர் மயிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்ற கன்னியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.அப்போது, நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் அஜித்குமார் (19) என்பவர் கன்னியம்மாளின் தந்தையான மூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கன்னியம்மாளை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
அதன் பின்னர் அஜித்குமார் திண்டிவனம் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே உள்ள ஒரு கடையில் வைத்து கன்னியம்மாளை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அஜித்குமார் கன்னியம்மாளை அழைத்து சென்று அவரது பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
பின்பு, காலையில் கன்னியம்மாள் அவரது வீட்டின் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் கன்னியம்மாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அஜித்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாரும், கன்னியம்மாளும் காதலித்து வந்ததும், அஜித்குமார் திண்டிவனம் அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.