விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்கள் நடந்த அதிரடி சோதனையில், குட்கா விற்ற 60 கடைக்காரர்கள் மீது வழக்கு பதிந்து, 10 கடைகளுக்கு சீல் வைத்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குட்கா மற்றும் போதை பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில், போலீசார் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை செய்து, அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று முன்தினம் முதல் நாளில், குட்கா விற்றதாக 22 கடைகாரர்கள் மீது வழக்கு பதிந்தனர். அதில், திண்டிவனம், கோட்டக்குப்பம் பகுதிகளில் அதிகளவு குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். 4 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, நேற்று முழுவதும் நடந்த சோதனையில், 38 கடைகளில் குட்கா விற்றது கண்டறியப்பட்டு, 38 கடை காரர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. 10 கிலோ குட்காவும், 10 கிலோ மாவா, கூலிப் 3 கிலோ போன்ற போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 2 பேர் கைது செய்யப்படனர்.
இந்த வகையில், கடந்த இரு தினங்களில் நடந்த அதிரடி சோதனையில், மொத்தம் 60 கடைக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டும், 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 27 கிலோ குட்கா, போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.